தொழிலாளியை கத்தியால் குத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துந்தரீகம்பட்டு கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டு நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் அருணகிரி சத்திரம் பகுதியில் வசிக்கும் சோழபாண்டி என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை தங்கராஜ் சோழ பாண்டிக்கு திருப்பி கொடுக்கவில்லை. கடந்த 30 – ஆம் தேதியன்று சோழ பாண்டி தனது நண்பரான கோபிநாத் மற்றும் ராஜாவுடன் துந்தரீகம்பட்டு கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது சோழ பாண்டி தங்கராஜிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு தங்கராஜ் தனது நண்பரான ரவியிடம் கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து தங்கராஜ் சோழ பாண்டி உள்பட 4 பேரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அங்கு ரவியை வரவழைத்து அவருக்கும் மதுவை கொடுத்து குடிக்க வைத்துள்ளனர். பின்னர் சோழ பாண்டி, கோபிநாத் உள்ளிட்ட 4 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
அதன் பின் அந்த வழியாக சென்றவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்த ரவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து ரவி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சோழ பாண்டி, கோபிநாத் மற்றும் ராஜாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் தங்கராஜை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.