டிரைவராக வேலை செய்த வீட்டில் ஆள் இல்லாத போது கள்ள சாவி போட்டு திருடிய வாலிபரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்
சென்னை மாவட்டத்தில் உள்ள ஒக்கியம்பேட்டை பகுதியில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். ரமேஷ்குமாரிடம் காரைக்குடி பகுதியில் வசித்து வந்த ராஜகோபால் என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். ஆனால் திடீரென ராஜகோபால் வேலையில் இருந்து நின்று விட்டார். இந்நிலையில் 30 பவுன் நகைகள் தனது வீட்டில் மாயமாகி இருந்ததைக் கண்ட ரமேஷ்குமார் உடனடியாக துரைப்பாக்கம் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில் போலீசாருக்கு ரமேஷ்குமாரின் வீட்டில் வேலை செய்து வந்த ராஜகோபாலின் மீது சந்தேகம் எழுந்ததால் திருப்போரூர் பகுதியில் இருந்த ராஜகோபாலிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ரமேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, கள்ள சாவி போட்டு கதவை திறந்து உள்ளே இருந்த நகைகளை திருடியதாக ராஜகோபால் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து திருடிய நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தில் வாங்கிய காரை பறிமுதல் செய்த போலீசார் ராஜகோபாலை கைது செய்து சிறையிலடைத்தனர்.