செல்போன் மற்றும் பணத்தை பறிக்க விடாமல் தடுத்த வாலிபரை 4 பேர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் மகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ஹரி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் 4 பேர் கொண்ட ஒரு கும்பல் மகேஷிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். அதனை மகேஷும், அவரது நண்பரும் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த 4 மர்ம நபர்களும் சேர்ந்து மகேஷை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனால் படுகாயம் அடைந்த மகேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மகேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமங்கலம் பகுதியில் வசிக்கும் காமேஷ் மற்றும் மூன்று சிறுவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.