கடனை திருப்பி கேட்ட வியாபாரியின் மகனை மர்ம கும்பல் கடத்தி சென்று வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் வியாபாரியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேகர் என்ற மகன் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மணி சண்முகம் என்பவரிடம் இருந்து 4 லட்ச ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஊரடங்கு காரணத்தினால் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் மணி அவதிப்பட்டுள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்த சண்முகம் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சேகரை காரில் கடத்தி சென்றுள்ளனர்.
அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சேகரை சரமாரியாக தாக்கி கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். மேலும் அந்த கும்பல் சேகரின் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளனர். அதன்பிறகு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மணியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டு மகனை மீட்டு சொல்லுமாறு தெரிவித்துள்ளனர். இதனால் தனது உறவினரான டேவிட் என்பவரிடம் மணி 4 லட்ச ரூபாயை கொடுத்து அனுப்பியுள்ளார். இதனையடுத்து சேகரை ரத்த காயத்துடன் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் வீட்டிற்கு முன்பு இறக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
அதன் பின் படுகாயமடைந்து சேகரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் மணி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சண்முகத்தின் மகனான பாஸ்கர் மற்றும் அவரது உறவினரான ராஜேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சண்முகம் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.