தம்பதிகளை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓலையூர் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் புரட்சிமணி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே ஒரு இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பாலமுருகனின் மனைவி சுகன்யா அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த புரட்சிமணி சுகன்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அதனை தட்டிக் கேட்க வந்த பாலமுருகனை தாக்கியுள்ளார்.
அதோடு பாலமுருகனை புரட்சிமணி கீழே கிடந்த கல்லால் தாக்க முயன்றபோது, அந்த கல் எதிர்பாராதவிதமாக சுகன்யாவின் தலை மற்றும் முகத்தில் பட்டது. அதன் பின் தம்பதிகள் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு புரட்சிமணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து காயமடைந்த சுகன்யா சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.