போலீசாரின் கண்முன்னே மருத்துவமனையில் வாலிபர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அண்ணாநகர் பகுதியில் பாண்டி சுப்புராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இறந்ததால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாண்டி சுப்புராஜ் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அதிகாலை 5 மணி அளவில் போலீசார் அரசு மருத்துவமனையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, மருத்துவமனைக்கு வெளியே பாண்டி சுப்புராஜ் உடலில் காயங்களுடன் நின்று கொண்டிருந்ததை பார்த்துள்ளனர்.
இதனால் திருடன் என சந்தேகப்பட்டு போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நோயாளி என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை மருத்துவமனைக்குள் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முயன்றபோது, கோபமடைந்த பாண்டி சுப்புராஜ் கொரோனா பரிசோதனை மையத்திற்குள் புகுந்து அங்கிருந்த பரிசோதனை கருவிகள், கம்ப்யூட்டர் மற்றும் கண்ணாடி போன்றவற்றை அடித்து நொறுக்கி விட்டார். இதனால் போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.