நேற்று ஒரே நாளில் தனி நபர் ஒருவர் 52,841 ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் 40 நாட்கள் கழித்து பல மாநிலங்களில் நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளியை மறந்து குடிமகன்கள் மதுவை வாங்க முந்தியடித்து கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் ஒருவர் நேற்று ஒரே நாளில் 52841 ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கி குவித்துள்ளார். பெங்களூரை சேர்ந்த அவர் 17 ரக மதுபானங்களை 128 பாட்டில்களில் வாங்கியுள்ளார்.
தவரே கேரே ரோட்டில் அமைந்திருக்கும் வெணிலா மதுபான கடையில் இவர் வாங்கிய மதுபானங்களின் விலை ரசீதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் அப்புகைப்படம் இப்போது வைரலாக பரவிவருகின்றது. குடிமகன்களின் இந்த ஆர்வத்தை பார்க்கும்பொழுது கொஞ்சம் பயம் எழவே செய்கின்றது. அதுமட்டுமன்றி டாஸ்மாக் இல்லாத நாட்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, வீட்டிலேயே சாராயம் காய்ச்சுவது என மக்கள் இறங்கிவிட அவர்களைத் தேடித் தேடி கைது செய்யும் பணியையும் சமூக இடைவெளியை பின்பற்றாத மக்களையும் கட்டுப்படுத்துவதிலும் காவல்துறை பெரிதும் அவதிப்பட்டு வருகின்றது.
ஆனால் நேற்று டாஸ்மாக் கடைகளில் நிரம்பி வழிந்த கூட்டம் அனைத்து மக்களையும் கவலையடைய செய்து இருப்பதை மறுக்க முடியாது. பல மாநிலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக மதுபானங்களின் விலையை அதிகரித்து விற்பனை செய்து வருகின்றனர். வடகிழக்கு இந்தியாவில் மக்கள் சமூக இடைவெளியை சரியாக பின்பற்றாத காரணத்தினால் கடைகளை மூடி உள்ளனர். தமிழகத்தில் வருகின்ற 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது என தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.