தலைமை செயலக அதிகாரியிடம் மர்ம நபர் 1 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் சத்தியநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமை செயலகத்தில் இணை செயலாளராக இருக்கின்றார். இந்நிலையில் சத்யநாராயணனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும், கூடுதல் தகவல்களை வங்கி கணக்கில் இணைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய சத்யநாராயணன் தனது வங்கி கணக்கின் விவரங்களையும், செல்போன் எண்ணிற்கு வந்த ரகசிய குறியீட்டு எண்களையும் அந்த நபரிடம் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு செல்போன் இணைப்பை அந்த நபர் துண்டித்த சிறிது நேரத்திலேயே சத்யநாராயணன் வங்கி கணக்கில் இருந்து 1 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. இதுகுறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் சத்தியநாராயணன் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பண மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.