அதிகாரி ஒருவர் மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் இருந்து 75 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வேப்பம்பட்டு பகுதியில் ரமேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலையில் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகின்றார். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ரமேஷ்பாபு தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும் எனவும், மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி பலரிடம் இருந்து 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார். ஆனால் இதுவரை ரமேஷ் பாபு யாருக்கும் வேலை வாங்கி கொடுக்காததால் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி சம்பந்தப்பட்டவர்கள் ரமேஷ் பாபுவிற்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதனால் தான் ஏமாற்றியது வெளியே தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் ரமேஷ்பாபு திடீரென தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் ரமேஷ் பாபுவால் பாதிக்கப்பட்ட சிலர் தலைமறைவாக இருந்த அவரை பிடித்து அம்பத்தூர் காவல் மாவட்ட துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டனர். இதுவரை 20 பேர் ரமேஷ் பாபு மீது புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரமேஷ்பாபு 75 லட்ச ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. அதன்பின் ரமேஷ் பாபுவை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.