ரியல் எஸ்டேட் அதிபர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கவின், சுதர்சன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவருக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது நண்பர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளார்.
அதன் பின் கடன் கொடுத்தவர்கள் அந்த பணத்தை திரும்பி கேட்டுள்ளனர். ஆனால் அவரால் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால் சொந்த ஊரில் உள்ள தனது நிலத்தை விற்று அந்தப் பணத்தை கொடுக்க முடிவு செய்துள்ளார். இந்நிலையில் அந்த நிலத்தை விற்பனை செய்வதற்காக சேலத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு சென்ற பாண்டியராஜன் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பிரியா பாண்டியராஜனை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் அழைப்பை எடுக்காததால் உடனடியாக திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரின் செல்போன் எண் தொடர்ந்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் பகுதியில் பயன்பாட்டில் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த மண்டபம் முழுவதும் தேடி உள்ளனர். அப்போது பூட்டி இருந்த ஒரு கழிப்பறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பாண்டியராஜன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது அருகில் ரத்தக்கரை படிந்த பிளேடு இருந்துள்ளது.
அதன்பின் அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, திண்டுக்கல் சேர்ந்த ஒருவரை பார்த்து நிலத்தை விற்பனை செய்வதற்காக பாண்டியராஜன் வந்துள்ளார். ஆனால் மனமுடைந்து காணப்பட்ட பாண்டியராஜன் கழிப்பறைக்குள் சென்று பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.