பெற்றோர் தனக்கு செல்போன் வாங்கி தராத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தனம்பாளையம் வாய்க்கால் மேடு பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தனக்கு செல்போன் வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் அடிக்கடி கேட்டு வந்தார். ஆனால் அவரது பெற்றோர் அவருக்கு செல்போன் வாங்கி கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் பிரபாகரனுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டபோது, மனமுடைந்த பிரபாகர் தனது வீட்டின் கதவை சாத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டார். அவரது பெற்றோர்கள் அவர் தூங்க போகிறார் என்று நினைத்து சாதாரணமாக விட்டு விட்டனர்.
ஆனால் காலையில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அவரது பெற்றோர்கள் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பிரபாகரன் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.