மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டத்தில் ஷைபின் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அபினா என்பவருக்கும் முகநூலில் காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து ஷைபினுக்கு குடிப்பழக்கம் இருப்பது அபினாவிற்க்கு தெரியவர, கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, கோபமடைந்த அபினா தன்னுடைய உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த ஷைபின் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.