வீட்டை விட்டு வெளியேறிய நபர் வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெய் தாளபுரம் வனப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொட்டகாஜனூர் கிராமத்தில் வசிக்கும் சித்தப்பா என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் டிராக்டர் ஓட்டுனராக பணிபுரியும் சித்தப்பா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மனைவியிடம் மதுபோதையில் சண்டை போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின் சித்தப்பா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலில் சில காயங்கள் இருந்ததால் மதுபோதையில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்தனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.