கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக எலக்ட்ரீசியன் பாழடைந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் மோகன் என்ற எலக்ட்ரீசியன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி போதையில் தனது வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் தனது மனைவியை மிரட்டுவது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் மோகன் மது குடித்துவிட்டு வந்து அவரது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து திடீரென கோபமடைந்த மோகன் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் மோகனை காப்பாற்ற இயலவில்லை. அதன்பின் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மோகனின் உடலை மீட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளசரவாக்கம் போலீசார் மோகனின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.