மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பாடி என்ற பகுதியில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுகுமார் சின்ன குக்குண்டியில் உள்ள தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் புதுப்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக செய்யாறில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த லாரி ஒன்று திடீரென இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது.
இதனால் பலத்த காயமடைந்த சுகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.