மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வடுக பாளையம் பகுதியில் நித்திய குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி உள்ளார். இவர் பல்லடம் கடைவீதியில் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் தனது மனைவியை அழைத்து செல்வதற்காக நித்திய குமார் பல்லடத்திற்கு புறப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பல்லடம் நால் ரோடு சிக்னல் பகுதியை நித்திய குமார் கடக்க முயற்சி செய்த போது எதிரே வந்த லாரி இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த நித்தியகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் ரேணுகா புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.