நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள சேவன் கொட்டாய் என்ற பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் சிலம்பரசனுக்கு கமலா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தனது நண்பர்களுடன் சிலம்பரசன் தும்பல அள்ளி அணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அணைக்குள் இருந்து மண் எடுத்து வருவதாக கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வராத காரணத்தால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் சிலம்பரசனை தண்ணீரில் வெகு நேரம் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைக்குள் மூழ்கிய சிலம்பரசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து நீரில் மூழ்கிய சிலம்பரசனை தீயணைப்பு படை வீரர்கள் சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.