கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தவர் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள எண்ணமங்கலம் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தனது ஊருக்கு வந்த பிரகாஷ் 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர்.
ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய பிரகாஷ் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் மின்மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றி பிரகாஷின் உடலை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.