கிணற்றில் விழுந்த வாலிபரை தீயணைப்பு நிலைய வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு பின்புறம் இருக்கும் கிணற்றில் இருந்து வாலிபரின் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அங்குள்ளவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த போது வாலிபர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து உடனடியாக பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் விழுந்த வாலிபரை உயிருடன் மீட்டனர். அதன் பிறகு அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் மதனகோபாலபுரம் பகுதியில் வசிக்கும் லிங்கராஜ் என்பதும், அவ்வழியாக சென்ற போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வாலிபரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.