நண்பர்களுடன் குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நவாவூர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சித்திரைச்சாவடி அணைக்கு குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துவிட்டு அணையில் இறங்கி குளித்துள்ளனர். இதனையடுத்து பழனிச்சாமி தண்ணீர் தேங்கிய பகுதியில் தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் பழனிச்சாமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தொண்டாமுத்தூர் காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து நடந்த சித்திரைச்சாவடி அணைக்கட்டு பகுதியில் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் எச்சரிக்கை பலகை வைத்த போதிலும், பல பேர் இவ்வாறு மது அருந்துவதற்காக வருகின்றனர்.