ஆஸ்திரேலியாவில் ஒரு நபர் தண்ணீருக்கு அடியில் தன்னை தாக்கிய முதலையுடன் சண்டையிட்டு உயிர் தப்பியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒரு நபர், தன் நண்பர்களோடு இருசக்கர வாகனத்தில் சுற்றுபயணம் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில், தண்ணீரின் அடியில் மறைந்திருந்த ஒரு முதலை அவரின் கையை கவ்விவிட்டது. வலி தாங்க முடியாமல் கதறிய அவர் துணிச்சலுடன் முதலையை தாக்க தொடங்கினார்.
ஆனால், முதலை அவரின் கையை விடவில்லை. இதனால் மற்றொரு கையை வைத்து முதலையை முடிந்தளவு தாக்கியுள்ளார். அப்போது அவரின் கை முதலையின் வாயிலிருந்து விடுபட்டவுடன் உடனடியாக வேறு இடத்திற்கு நீந்தி சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து அவருடன் வந்த குழுவினர் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது அவர் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அந்த நபர் தெரிவித்ததாவது, அந்த முதலை இரண்டிலிருந்து மூன்று மீட்டர் வரை நீளம் உடையது. அதனுடன் சண்டையிட்டு போராடியதால் தான் உயிர் தப்பி வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஒரு அதிகாரி இது குறித்து தெரிவித்ததாவது, 3 மீட்டர் நீளமுடைய முதலையுடன் சண்டையிட்டு தப்பி வருவது சாதாரணம் கிடையாது. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.