பிரிட்டன் நாட்டில் 22 வருடங்களுக்கு முன் பயணிகள் விமானத்தை கடத்திய ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் மனைவியை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் தற்போது சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த முகமது சஃபி என்ற நபர் கடந்த 2000-ஆம் வருடத்தில் ஒன்பது நபர்கள் கொண்ட குழுவுடன் திட்டமீட்டு 156 பயணிகள் சென்ற விமானத்தை துப்பாக்கி முனையில் கடத்தினார். மேலும் மூன்று நாட்களுக்கு அந்த விமானம் சிறை வைக்கப்பட்டது. எனினும், பிரிட்டன் அரசு அவரின் புகலிடக் கோரிக்கையை ஏற்றது.
இது மட்டுமல்லாமல், அவர் பிரிட்டனில் தங்குவதற்கு கடந்த 2006 ஆம் வருடத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த டோனி பிளேயர், இந்த தீர்ப்பை கடுமையாக எதிர்த்தார். இந்நிலையில், கடந்த வருடத்தில் முகமது ஷஃபி தன் மனைவியை கோடரியால் அடித்து கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்.
இந்த வழக்கில் கைதான அவருக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனைவியை கொலை செய்ய முயற்சித்த அவர், தாயை காப்பாற்ற வந்த மகளையும் கத்தியால் குத்தி இருக்கிறார். இவர் மீதான குற்றங்கள் கடந்த மே மாதத்தில் உறுதியானது. இதனைத்தொடர்ந்து மனைவியை கொலை செய்ய முயற்சிதற்காக 18 வருடங்களும், மகளை தாக்கிய குற்றத்திற்காக இரண்டு வருடங்களும் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.