வடமாநில தொழிலாளியை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கனககிரி வேலாயுத சுவாமி கோயில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சத்யா நகரில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு நிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் செருப்பு ரப்பரை கட்டிங் செய்யும் மிஷின் வைத்து தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நசுருதீன் என்பவர் வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து அவர்களுடன் சேர்ந்து பணிபுரிவது வழக்கம். இந்நிலையில் அந்த தொழிற்சாலையில் பணிபுரிபவர்களிடம் சரியாக வேலை செய்யுமாறு நஸ்ருதீன் கண்டித்ததால் பழிவாங்கும் நோக்கத்தோடு அமித்ஷா மற்றும் ஜெயக்குமார் என்பவர்கள் இரவு நேரத்தில் குடித்துவிட்டு பணிக்கு வந்துள்ளனர்.
இதனை அடுத்து இரண்டு பேரும் சேர்ந்து நசுருதீனின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளரான செல்வராஜ் என்பவர் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அந்த விசாரணையில் தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நஸ்ருதீன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அமித்ஷா மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.