கனடாவில் ஒரு நபர் தனக்கு புற்றுநோய் பாதித்திருந்தபோது சிகிச்சை செய்வதாக கூறி, ஆண்மை நீக்கம் செய்த மருத்துவரை அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கனடா நாட்டின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இருக்கும், Red Deer என்னும் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்குள் புகுந்த Deng Mabiour என்ற 54 வயதுடைய நபர், அங்கிருந்த Dr. Walter Reynolds என்ற மருத்துவரை சுத்தியலால் அடித்துக்கொன்றார். அதன்பின்பு காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் காவல்துறையினரிடம் தெரிவித்ததாவது, எனக்கு அரிய வகையான புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, Walter Reynolds, மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதாக கூறிவிட்டு ரசாயனத்தை செலுத்தி ஆண்மை நீக்கம் செய்தார். அதனை என்னிடம் கூறினார். எனவே இது தொடர்பில் ஆல்பர்ட்டா மாகாணத்தின் மருத்துவ அமைப்பு, மனித உரிமைகள் அமைப்பு மற்றும் தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் போன்றோரிடம் புகார் தெரிவித்தேன்.
ஒருவரும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. நான் குற்றவாளி இல்லை, நான் செய்த இந்த தவறுக்கு அரசு உட்பட, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத இவர்கள் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். பழிவாங்குவதற்காக தான் இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் நான் கருப்பினத்தை சேர்ந்தவன் என்ற காரணத்தால், தனக்கு இவ்வாறு நடந்ததாக கூறிய அவர், என்னைப் போன்று வேறு எந்த கருப்பினத்தவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் மருத்துவரை கொன்றதாக கூறி இருக்கிறார்.
அதன்பின்பு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீதிருந்த வழக்கு தொடர்பான விசாரணை இம்மாத கடைசியில் நடைபெற இருந்தது. இந்நிலையில், புற்றுநோய் பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.