பழிவாங்கும் நோக்கத்தோடு ஐ.டி.ஐ மாணவர் தனது உறவினர்களுடன் இணைந்து வாலிபரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோமநாதபுரம் கிராமத்தில் சூர்யா என்ற ஐ.டி.ஐ மாணவர் வசித்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சோமநாதபுரம் கிராமத்திற்கு வந்த ஆந்திரா காவல்துறையினர் சூர்யாவுக்கு விக்கோடா பகுதியில் நடைபெற்ற ஒரு வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி விசாரித்து சென்றுள்ளனர். இந்நிலையில் சோமநாதபுரம் கிராமத்தில் வசிக்கும் எல்லப்பா என்ற வாலிபர் தலைமறைவாக இருந்த சூர்யாவை கிராமத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டதாக கூறி தனது நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார்.
இதனை அடுத்து சூர்யா எல்லப்பாவை மது அருந்துவதற்காக அழைத்து சென்றுள்ளார். அதன்பின் சூர்யா தனது சித்தப்பாக்களான சுதர்சன் மற்றும் சதா போன்றோருடன் இணைந்து எல்லப்பாவை பழிவாங்கும் நோக்கத்தோடு அடித்து கொலை செய்து விட்டு அவரது உடலை தண்டவாளத்தில் வீசி சென்றுள்ளனர். இதற்கிடையில் எல்லப்பாவை காணவில்லை என ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சுதர்சன் மற்றும் சூரியா ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் எல்லப்பாவை கொலை செய்தது உறுதியானது. அதன்பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எல்லப்பாவின் சடலத்தை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் தலைமறைவான சதாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.