மர்ம நபர்கள் பட்டாக்கத்தியால் சமையல்காரரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களக்காட்டூர் காந்தி ரோட்டில் லிங்கமூர்த்தி என்ற சமையல்காரர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு தோட்டக்கலை எதிரில் நின்று கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை பட்டாக்கத்தியால் வெட்டினர். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனையடுத்து பொதுமக்கள் வருவதை பார்த்ததும் அங்கிருந்த மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். இதனைதொடர்ந்து உயிருக்குப் போராடும் நிலையில் இருந்த லிங்கமூர்த்தியை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதன்பின் அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, காஞ்சிபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜகோபால் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து, மர்ம நபர்கள் லிங்கமூர்த்தியை முன்விரோதம் காரணமாக கொலை செய்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.