இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் தனது மகள் மற்றும் மாமியாரை சுட்டுக் கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவில் உள்ள ஸ்கோடாக் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பூபிந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது வீட்டில் உள்ள குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மிகுந்த கோபமடைந்த பூபிந்தர் சிங் தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக அங்குமிங்கும் சுட்டார். இதனால் பூபிந்தர் சிங்கின் மாமியார் மன்ஜித் கவுர் மற்றும் பூபிந்தர் சிங்கின் மகள் ஜஸ்லீன் கவுர் போன்றோர் மீது குண்டுகள் பாய்ந்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து விட்டனர். அதோடு அவரது வீட்டில் இருந்த ராஜ்கபூர் என்ற பெண் படுகாயம் அடைந்தார்.
அங்கு படுகாயமடைந்த இந்த பெண் பூபிந்தர் சிங்கிற்கு என்ன உறவு என்ற தகவல் தெரியவில்லை. இவர் தனது கையில் குண்டு காயத்துடன் வீட்டில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து துப்பாக்கியால் பூபிந்தர் சிங் தன்னையே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பூபிந்தர் சிங்கிடம் இருந்து தப்பித்த அந்த பெண்ணை மீட்ட போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நியூயார்க் மாகாண போலீசார் வழக்கு பதிந்த பூபிந்தர் சிங்கின் இந்த கொடூர செயல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.