அமெரிக்க நாட்டில் தன் கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொன்ற கணவருக்கு வாழ்நாள் முழுக்க ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் மிசூரி என்னும் மாகாணத்தில் வசிக்கும் 31 வயது நபர் பியூ ரோத்வெல். அவர் ஆறு வார கர்ப்பிணியாக இருந்த தன் மனைவி ஜெனிபரை கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பிறகு தன் மனைவி காணாமல் போனதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து ஒரு வாரம் கழித்து ஜெனிபரின் உடல் கண்டறியப்பட்டது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஜெனிஃபர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட முந்தைய நாள் பியூ ரோத்வெல், கடையிலிருந்து வீட்டை சுத்தமாக்கும் பொருட்களை வாங்கியது கண்காணிப்பு கேமராவில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பிறகு தன் மனைவியை கொலை செய்ததை அவர் ஒத்துக் கொண்டார். விசாரணையில் அவருக்கு வேறு பெண்ணுடன் இருந்த தொடர்பு பற்றி ஜெனிஃபர் கேட்ட பின்பு, ஏற்பட்ட மோதலால் மனைவியை அடித்ததாகவும் திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால் ஜெனிபர் கொலை செய்யப்படுவதற்கு முன், பியூ ரோத்வெல் தன் காதலி உடன் பகிர்ந்து கொண்ட குறுஞ்செய்திகள் சேகரிக்கப்பட்டது. அதன்படி அவர் தன் மனைவியை திட்டமிட்டு கொலை செய்தது உறுதியானது. எனவே, அவருக்கு ஆயுள் முழுக்க சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, ஜாமீனில் வெளிவரவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.