மது குடிக்க பணம் தாராததால் மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவர் தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முளகிரிபட்டி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சங்கர் பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். அதற்கு பார்வதி மறுத்ததால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சங்கர் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை மனைவி மீது ஊற்றி தீ வைத்து விட்டார்.
இதனை அடுத்து பற்றி எரிந்த தீயுடன் அலறியவாறு வீட்டுக்குள்ளேயே ஓடிய பார்வதி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் மனமுடைந்த சங்கர் தன் மீதும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீ குளித்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்நிலையில் வலி தாங்க முடியாமல் அலறிய சங்கரின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்துள்ளனர். அதன்பின் சங்கரை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் சங்கர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அனக்காவூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மது குடிக்க பணம் தாராததால் மனைவியை உயிரோடு எரித்து கொன்று விட்டு கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.