இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 22 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியரான அனில் கில்லும் அவரின் மனைவி ரஞ்சித் கில்லும், இங்கிலாந்தில் இருக்கும் ஷரி மாகாணத்தின் மில்டன் கினிஸ் நகரத்தில் இருக்கும் தாமஸ் வேலி என்ற பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். இத்தம்பதிக்கு மதுப்பழக்கமும் போதைப் பழக்கமும் இருந்ததால், அடிக்கடி இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி அன்று ரஞ்சித் கில், தனக்கு போதை பொருள் விற்பவருடன் பழக்கம் இருப்பதாக தன் கணவரிடம் கூறியிருக்கிறார். இதனால், இருவரும் பயங்கரமாக சண்டையிட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அனில் கில், தன் மனைவியை 18 தடவை கத்தியால் குத்தியிருக்கிறார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
அதன்பின், மனைவியின் உடலை போர்வையில் சுற்றிய அனில் கில், குப்பையில் வீசி இருக்கிறார். இது தொடர்பில் அண்டை வீட்டினர் புகார் அளித்துள்ளனர். அதன்பின்பு காவல்துறையினர் அனில் கில்லை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் தன் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பில் லுடன் க்ரவுன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. தற்போது அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 22 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்புளிக்கப்பட்டிருக்கிறது. 22 வருடங்கள் கழித்த பின்பு தான் அவர் பரோல் கேட்டு விண்ணப்பிக்க முடியும்.