பிரிட்டனை சேர்ந்த ஒரு நபர் ஆவணத்தை தவறவிட்டதால் பாரிஸ் விமான நிலையத்தில் 2 வாரங்களாக மாட்டிக் கொண்டு தவித்திருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் வசிக்கும் அப்துல் ஜோப், சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். தன் விடுமுறைக்காக குடும்பத்தினரை சந்திக்க காம்பியாவிலிருந்து, பாரிஸ் வழியே பிரிட்டன் திரும்பிய போது, பாரிஸின் Charles de Gaulle விமான நிலைய அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டார்.
தான், பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை தவறவிட்டார். அவரிடம், தகுந்த ஆவணங்கள் இல்லாததால் விமான நிலைய நிர்வாகம் அவரை வெளியேற விடவில்லை. எனவே, அவர் தன் ஆவணங்களை பிரிட்டனிலிருந்து விமான நிலைய அதிகாரிகளிடம் காண்பிக்கும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது.
இதன் காரணமாக கழிவறை குழாய் தண்ணீரை குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். பயணிகளின் இருக்கையில் இரவு நேரத்தில் தூங்கி வந்திருக்கிறார். மேலும், தன் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் தவறவிட்டார். எதிர்பாராமல் விமான நிலையத்தில் மாட்டிக்கொள்ளும் நிலை உண்டானதால் தகுந்த பணமும் இல்லாமல் தவித்துள்ளார்.
எனவே, உணவு வாங்க பணம் இன்றி குழாய் நீரை குடித்து வந்துள்ளார். இரண்டு வாரங்களாக பல் துலக்காமல், குளிக்காமல் கடும் பாதிப்புக்குள்ளானதாக தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக யாரிடமும் உதவி கேட்க செல்ல முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். 14 நாட்கள் கழித்து ஒரு வழியாக பிரிட்டன் உள் விவகார அமைச்சகம் அனுமதி வழங்கிய பின் அவர் நாடு திரும்பியிருக்கிறார்.