காவல்துறையினரிடம் சரணடையப் போவதாக கூறியதால் வாலிபரை நண்பர்கள் அடித்துக் கொன்று கடற்கரை மணலில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் தாளங்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் அப்பனு என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பனு தனது நண்பர்களான எண்ணூரில் வசிக்கும் ஸ்ரீதர், ஜி.எம் பேட்டை பகுதியில் வசிக்கும் தினேஷ், முத்தமிழ், நிசாந்தன் போன்றோருடன் இணைந்து எண்ணூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் முடிவெட்டும் கடை வைத்திருக்கும் லோகேஷ் என்பவரிடம் சென்று வீட்டு வேலைக்கு துளைபோடும் எந்திரத்தை கடந்த 14ஆம் தேதி வாடகைக்கு கேட்டுள்ளார்.
ஆனால் அதனை லோகேஷ் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் நண்பர்கள் ஐந்து பேரும் இணைந்து லோகேஷை தாக்கியுள்ளனர். இதனால் எண்ணூர் காவல் நிலையத்தில் லோகேஷ் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 5 நண்பர்களையும் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காசிமேடு ஜீரோ கேட் பகுதியில் தலைமறைவாக இருந்த அந்த 5 பேரும் காவல் துறையினர் தேடுவதை அறிந்தனர்.
அந்த சமயம் குடிபோதையில் இருந்த அப்பனு எண்ணூர் காவல் நிலைத்தில் தான் சரணடைய போவதாக தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த நண்பர்கள் பீர் பாட்டில் மற்றும் உருட்டு கட்டையால் அப்பனுவை அடித்து கொலை செய்து விட்டு அவரது உடலை கடற்கரை மணலில் புதைத்தனர். இதனையடுத்து மகனைக் காணாத அப்புனுவின் பெற்றோர் அவரது நண்பர்களிடம் தனது மகன் எங்கே என்று கேட்டுள்ளனர். இதற்கிடையில் அப்புவின் உடலை நாய்கள் வெளியே எடுத்து கடித்து குதறியது.
இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அவரது நண்பர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்த போது அவர்கள் நடந்தவைகளை கூறி அப்புனுவை கொலை செய்ததை ஒப்பு கொண்டனர்.