தந்தையின் கண்முன்னே மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டேல் ரோடு பகுதியில் பிரம்ம தேவன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணன் என்ற மகன் உள்ளார். இவர் தனது பாலிடெக்னிக் படிப்பை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தியதோடு, வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் நாராயணன் சாலையோர கடையில் சாப்பிட்டுவிட்டு தனது வீட்டிற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 7 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் நாராயணனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இவை அனைத்தையும் தனது வீட்டு மாடியில் இருந்து பார்த்த பிரம்மதேவன் அதிர்ச்சி அடைந்து ஓடி வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாராயணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர் ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோயம்பேடு காவல் துறையினர் நாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் வசித்து வரும் ரவுடி தனஞ்ஜெயன் என்பவருக்கும், நாராயணனுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாராயணன் தனது நண்பர்களுடன் இணைந்து தனஞ்ஜெயனை தாக்கியுள்ளார். இதில் கோபமடைந்த தனஞ்செயன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நாராயணனை வெட்டிக் கொலை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாராயணனை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக செல்வா, சாரதி, இரண்டு சிறுவர்கள் என மொத்தம் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு தலைமறைவான தனஞ்செயன் மற்றும் அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.