நண்பரை அடித்து கொலை செய்துவிட்டு கீழே விழுந்ததாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் செயல்பட்டு கொண்டிருக்கும் தனியார் சாக்கு தயாரிக்கும் நிறுவனத்தில் கணேசன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இதே நிறுவனத்தில் அவரது நண்பரான கார்த்திக் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் பிரியாணி வாங்கி வருமாறு கணேசனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து கணேசன் வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்டு விட்டு அது சரி இல்லை என்று கூறி கார்த்திக் அவரது முகத்தில் வீசியுள்ளார். அப்போது கோபமடைந்த கணேசன் கார்த்திக்கின் மனைவியை தரக்குறைவாக பேசியதால் இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கியுள்ளார். அதன்பிறகு இருவரும் தூங்க சென்றுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை வேலைக்கு சென்ற கார்த்திக்கிடம் நிறுவன உரிமையாளர் கணேசன் பற்றி கேட்டுள்ளார்.
அதற்கு கார்த்திக் கணேசன் லாரியில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டதும் ஆம்புலன்சை வரவழைத்து கணேசனை நிறுவன உரிமையாளர் ரமேஷ் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதற்கிடையில் ரமேஷ் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை பிடித்து விசாரணை நடத்திய போது கார்த்திக் தாக்கியதால் தான் கணேசன் இறந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இவ்வாறு நண்பரை அடித்து கொலை செய்து விட்டு கீழே விழுந்ததாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.