சுவிட்சர்லாந்தில் ஒரு இளைஞர், சிறுவனுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதால் நீதிமன்றம் கடும் தண்டனை விதித்திருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் உள்ள Schwyz என்ற மாவட்டத்தில் வசிக்கும் 27 வயது இளைஞர் ஒருவர், இணையதளத்தின் மூலம் 14 வயது சிறுவனுடன் அறிமுகமாகியிருக்கிறார். அதன்பின்பு, இருவரும் குறுஞ்செய்திகள் அனுப்பி கொண்டனர். அப்போது, அவர்கள் அனுப்பிய 400 குறுஞ்செய்திகளில் 8 குறுஞ்செய்திகள் அருவருக்கும் வகையில், ஆபாசமாக இருந்துள்ளது.
எனினும், ஆபாசமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை இருவரும் பகிரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தில் அந்த இளைஞர் மீது சிறுவர் துஷ்பிரயோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், தினமும் 120 பிராங்குகள் என்று 100 நாட்கள் அபராதம் செலுத்த வேண்டுமென்றும், கூடுதலாக 3000 பிராங்குகள் அபராதம் செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறிவிட்டது.
இது மட்டுமல்லாமல், அந்த இளைஞர் தன் வாழ்நாள் முழுவதும், சிறுவர்களுடன் பணியாற்றுவதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் அந்த இளைஞர், நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் காயப்படுத்தவில்லை. பொழுதுபோக்காக சில குறுஞ்செய்திகள் தான் அனுப்பினேன் என்று நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். எனினும், நீதிமன்றம், அரசு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு கடும் தண்டனைகளை விதித்துவிட்டது.