மண்சரிவில் சிக்கிய 2 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி அவசிய தேவை இருந்தால் மட்டுமே மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில் குன்னூர் பகுதியில் அனுமதி பெறாமல் பொக்லைன் எந்திரம் மூலம் கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் மழை பெய்து வருவதால் நிலப்பகுதி சற்று ஈரமாக காணப்படுகிறது.
இந்நிலையில் அங்கு கான்கிரீட் தூண் அமைப்பதற்காக மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ராகுல், ரசீது என்ற 2 வடமாநில தொழிலாளர்கள் மீது மொத்தமாக மண் சரிந்து விழுந்து விட்டது. இதனால் மண்ணுக்குள் சிக்கி படுகாயமடைந்த 2 தொழிலாளர்களையும் அருகில் உள்ளவர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.