Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்கு கோவா போக ஆசை” சொந்த அத்தையிடமே தில்லுமுல்லு… வசமாக சிக்கிய வாலிபர்கள்…!!

நண்பர்களுடன் கோவா செல்வதற்காக சொந்த அத்தையிடமிருந்து வாலிபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் ரத்தினமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரத்தினமாள் திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலத்தின் கீழ் இருக்கும் ரயில்வே குடியிருப்பு நுழைவுவாயில் பக்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த 3 மர்ம நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர். அதன் பின் அந்த மர்ம நபர்கள் ரத்தினமாளை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ரத்தினமாள் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது ரத்தினமாளின் உடன்பிறந்த தம்பியான மாதவன் என்பவரது மகன் பாலாஜி தனது நண்பர்களுடன் இணைந்து ரத்தினமாளிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பாலாஜி, அவரது நண்பர்களான ஜெயகிருஷ்ணா. திருமூர்த்தி. பாலாஜி போன்ற 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த தங்க சங்கிலி மற்றும் 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து பாலாஜியிடம் நடத்திய விசாரணையில், நண்பர்களுடன் கோவாவுக்கு செல்ல பணம் தேவைப்பட்டதால் சொந்த அத்தை என்று கூட பாராமல் ரத்தினமாளிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்துள்ளது.

Categories

Tech |