வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனுமந்தண்டலம் கூட்ரோட்டில் சத்திய பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மரிய பாஸ்டினா அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் சத்யா பிரசாத்தின் சகோதரி வீட்டு விசேஷத்திற்காக சென்றிருந்தனர். அப்போது மரிய பாஸ்டினாவின் வீட்டிற்கு வந்த தாயார் ஆரோக்கியமேரி அவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் இத்தகவலை உடனடியாக மரிய பாஸ்டினாவிடம் அவரது தாயார் தெரிவித்ததையடுத்து, அங்கு அவர்கள் விரைந்து வந்தனர்.
இதனையடுத்து மரிய பாஸ்டினா வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களது வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது தம்பியின் மோட்டார் சைக்கிளையும் கொள்ளையர்கள் விட்டு விக்கவில்லை. இது குறித்து மரிய பாஸ்டினா உடனடியாக பெருநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.