அதிகாரிகள் மெமோ வழங்கியதால் மன உளைச்சலில் இருந்த கண்டக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வ.ஊ.சி நகர் 4 வது தெருவில் இளவரசன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கீதா பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் கடந்த 14 ஆண்டுகளாக தண்டையார்பேட்டை அரசு பணிமனைக்கு உட்பட்ட 56 டி மணலி பேருந்து கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பயணிக்கு பயணச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தவறு காரணமாக கடந்த மாதம் இவருக்கு அதிகாரிகளிடமிருந்து மெமோ வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அதிகாரிகள் தன்னை அடிக்கடி தொந்தரவு செய்வதாக இளவரசன் தனது மனைவியிடம் புலம்பியுள்ளார். இதனால் அவருக்கு ஆறுதல் கூறி கீதா அவரை பணிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இளவரசன் அவரது வீட்டில் இருந்த பழைய பொருட்கள் அடைத்து வைக்கப்படும் அறையில் திடீரென தனது மனைவியின் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து உடனடியாக திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருவொற்றியூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.