மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தபால் நிலைய ஊழியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் அற்புதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தபால் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அற்புதராஜன் தனது 3 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அற்புதராஜனின் உடைமைகளை சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது அற்புதராஜன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அற்புதராஜனிடம் இருந்த பெட்ரோல் கேனை பறித்துவிட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதுகுறித்து அற்புதராஜன் கூறும்போது, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டாமுத்தூர் எம்.ஜி.ஆர் நகரில் நான் வசித்து வருகிறேன். எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் இடப்பிரச்சினை காரணமாக என்னிடம் தகராறு செய்துள்ளார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு எனது மனைவியை தாக்கிய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவர் எனது மனைவி மற்றும் பெண் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றேன் என அற்புதராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.