தந்தை இறந்த துக்கத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம் பேட்டை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செந்தில் குமாரின் தந்தை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். அதன்பிறகு செந்தில்குமாரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்திலேயே குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையில் தனது தந்தை இறந்த மனவேதனையில் இருந்த செந்தில்குமார் அடிக்கடி இரவு நேரத்தில் “அப்பா என்னை கூப்பிடுகிறார் என்றும், நான் அவருடன் செல்கிறேன்” என்றும் புலம்பியுள்ளார்.
இந்நிலையில் செந்தில்குமாரின் குடும்பத்தினர் அவரது அப்பாவிற்கு சில சடங்குகளை செய்துள்ளனர். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த செந்தில் குமார் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.