திருநங்கையாக மாறுவதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் 22 வயது வாலிபர் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த வாலிபரின் உடை, நடை, பாவனைகளில் கடந்த சில மாதங்களாக மாற்றம் ஏற்பட்டு அவர் திருநங்கையாக மாறி வந்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வாலிபரை கண்டித்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் வைத்துள்ளனர். அந்த சமயம் அந்த வாலிபர் தான் முழுவதுமாக திருநங்கையாக மாறப் போவதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் வாலிபரின் விருப்பத்திற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் வீட்டின் கழிவறைக்குள் சென்று கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை எடுத்து குடித்ததோடு, கத்திரிக்கோலால் வயிற்றில் குத்தி கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அந்த வாலிபரை மீட்டு அவரது பெற்றோர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த எம்.கே.பி நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.