சுற்றுலா வேனிலிருந்து 17,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்பீக்கரை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள காக்காசோலை பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமார் தனக்கு சொந்தமான ஒரு சுற்றுலா வேனை கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து அந்த வேனில் இருந்த 17,000 ரூபாய் மதிப்பிலான ஸ்பீக்கரை மர்ம நபர் யாரோ திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் கோத்தகிரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெட்ரோல் பங்க்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் 17,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்பீக்கரை பாகலட்டி கிராமத்தில் வசித்து வரும் மனோகரன் என்பவர் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து குன்னூர் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த மனோகரனை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.