மது குடிக்க பணம் கொடுக்கவில்லை எனில் தீக்குளிக்கப் போவதாக வாலிபர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ.உ.சி தெருவில் கோகுல கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோகுலகிருஷ்ணன் தினமும் மது குடிக்க பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து தனது மனைவியையும், மாமியாரையும் திட்டி வீட்டிற்கு வெளியே அனுப்பிய கோகுலகிருஷ்ணன் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு நான் தற்கொலை செய்து கொள்வேன் என மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு மிரட்டியுள்ளார்.
இவ்வாறு நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் கலைவாணி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்த பிறகும் கோகுலகண்ணன் கதவைத் திறக்கவில்லை. இதனால் காவல் துறையினர் தீயணைப்பு படையினரின் உதவியோடு கதவை உடைத்துக்கொண்டு கிருஷ்ணனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.