தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய வாலிபர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள தட்டான் குளம் பகுதியில் பார்த்தசாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் மருந்து கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பார்த்தசாரதி தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பார்த்தசாரதியை நிறுத்தி விசாரித்தபோது அவர் மது போதையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் காவல் துறையினர் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததாக அவர் மீது வழக்கு பதிய முயற்சி செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த பார்த்தசாரதி திடீரென தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது வேகமாக ஏறியுள்ளார். அதன் பிறகு அங்கிருந்த மின்சார கம்பியை படித்ததால் மின்சாரம் தாக்கி பார்த்தசாரதி தூக்கி வீசப்பட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த அவரை காவல் துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.