மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.தொழுதூரை பகுதியில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ்குமார் என்பவரை காதலித்து ஐந்து வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் ராஜேஷ்குமார் நந்தினியுடைய 12 பவுன் நகையை வேலை வாங்கி தருவதாக கூறி விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நந்தினி ராஜேஷ்குமாரிடம் தான் கழுத்தில் போட்டுக் கொள்வதற்கு ஒரு நகை கூட இல்லை என சண்டை போட்டுள்ளார்.
பின்னர் மன உளைச்சலில் இருந்த நந்தினி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் நந்தினி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நந்தினியின் தாய் செல்வமணி தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.