மன உளைச்சலில் செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மையகரம் மேற்குத் தெருவில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக அரியலூர் மாவட்டத்தில் ஏலக்குறிச்சி கிராமத்தில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடம் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதினால் மஞ்சுளா தினமும் பேருந்தில் சென்று வந்துள்ளார்.
இதனால் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் கூட அவருக்கு ஓய்வு கிடைக்காமல் இருந்திருக்கிறது. அதன்பின் அதிகாரியிடம் கடந்த ஐந்து மாதமாக பணியிட மாறுதல் கேட்டு அவர் கோரிக்கை வைத்திருந்ததாக தெரிகிறது. இருப்பினும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் மஞ்சுளா இருந்திருக்கிறார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மஞ்சுளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.