திருச்சியில் வருகின்ற 25, 26ம் தேதிகளில் தற்காலிக காய்கறி கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் ஆங்காங்கே ஊரடங்கு மேலும் கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, திருச்சி மாநகர பகுதிகளில் தற்காலிக காய்கறி கடைகள் வருகின்ற 25, 26ம் தேதிகளில் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே போல் பழைய பால்பண்ணை பைபாஸ் சாலையில் உள்ள மொத்த காய்கறி விற்பனை கடையும் குறிப்பிட்ட தேதிகளில் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் நாள் தோறும் அதிக அளவில் கூடும் இடங்களாக இவைகள் கணிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.