நீலகிரியில் குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொலக்கம்பை தூதூர்மட்டம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர். இங்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அசோக் பகத் ஓரான்(27) என்பவர் தனது மனைவி சுமதி(24) மற்றும் தனது குழந்தைகள் ரேஷ்மா(4), அபய்(8) ஆகியோருடன் தங்கி அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அசோக் பகத் ஓரானின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்தனர். அப்போது வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுமதி சடலமாக கிடந்தார். வீட்டிற்கு அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் ரேஷ்மாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்த அபயின் உடலுக்கு அருகே அசோக் பகத் ஓரான் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து விட்டு அசோக் பகத் ஓரான் தற்கொலை செய்துள்ளார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர் . இதனை தொடர்ந்து உயிரிழந்த நால்வரின் உடல்களையும் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.