மனைவி மற்றும் அக்காவை அரிவாளால் வெட்டிய லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் மாப்பிள்ளை சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டபொம்மன்துரை என்ற மகன் உள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சக்கம்மாள் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் கட்டபொம்மன்துரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது அக்காள் ஈஸ்வரி மகள் உமாரஞ்சனியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கட்டபொம்மன்துரைக்கும் உமாரஞ்சனிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் உமாரஞ்சனி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது தாய்வீடான பாஞ்சாலங்குறிச்சி பகுதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் ஈஸ்வரியும் உமாரஞ்சனியும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கட்டபொம்மன் வீட்டிற்கு அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்த கட்டபொம்மன்துரை திடீரென அரிவாளை எடுத்து மனைவி மற்றும் அக்காள் ஈஸ்வரியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இருவரையும் உடனடியாக மீட்டு ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ஒட்டப்பிடாரம் காவல்துறையினர் கட்டபொம்மன்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.